36 ஆண்டுகள் அனுபவமிக்கவருக்கு ஏன் பொறுப்பு வழங்கவில்லை? நீதிமன்றம் காட்டம்!

36 ஆண்டுகள் அனுபவமிக்கவருக்கு ஏன் பொறுப்பு வழங்கவில்லை? நீதிமன்றம் காட்டம்!

36 ஆண்டுகள் அனுபவமிக்கவருக்கு ஏன் பொறுப்பு வழங்கவில்லை? நீதிமன்றம் காட்டம்!
Published on

36 ஆண்டுகள் பணி அனுபவம் மிக்க ரேவதிக்கு ஏன் தமிழக மருத்துவ கல்வி இயக்குநர் பணி வழங்கப்படவில்லை? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழக மருத்துவ கல்வி இயக்குனராக டாக்டர் எட்வின்ஜோ 25.4.2017-ல் நியமனம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து கரூர் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரைக்கிளை தனி நீதிபதி, எட்வின்ஜோ நியமனத்தை ரத்து செய்து உடனடியாக ரேவதியை மருத்துவ கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 20ல் உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக சுகாதாரத்துறை செயலர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், அப்துல்குத்தூஸ் அமர்வு கடந்த டிசம்பர் 12ல், “மருத்துவக் கல்வி இயக்குனராக எட்வின்ஜோ நியமிக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை, மருத்துவ கல்வி இயக்குனர் பணி மூப்பு பட்டியல் தொடர்பான அரசாணைகள் ரத்து செய்யப்படுகிறது. ரேவதியை மருத்துவ கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. ரேவதியை மருத்துவ கல்வி இயக்குனராக நியமனம் செய்வது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை செயலர் 6 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் டாக்டர் ரேவதி மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் நாராயணபாபு, மருத்துவ கல்லூரி இயக்குனர் பணிக்கான கூடுதல் பொறுப்புகளை கவனித்து வருகிறார். தமிழக மருத்துவ கல்லூரி இயக்குநர் பணியிடம் காலியாக இருப்பதாக கடந்த 22ல் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னை இயக்குனராக நியமனம் செய்வது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை செயலர் 6 வாரத்தில் பரிசீலிக்க கோரிய உத்தரவு நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஆகவே, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தாரணி அமர்வு, 36 ஆண்டுகள் பணி அனுபவம் மிக்க ரேவதிக்கு ஏன் தமிழக மருத்துவ கல்வி இயக்குநர் பணி வழங்கப்படவில்லை? என கேள்வி எழுப்பியது. அவரை விட அனுபவம் குறைந்தவர்களுக்கு பணி வழங்கப்பட்ட காரணம் என்ன? என்றும், அவரை மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்க ஏன் பரிசீலிக்கவில்லை எனவும் வினா எழுப்பப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலரிடம் உரிய விளக்கம் பெற்று சமர்பிக்க, அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், வழக்கு செலவுக்காக ரூ.4 லட்சம் ரேவதிக்கு வழங்க உத்தரவிடப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கையும் விடுத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com