பிரதமரை திட்டிய துணைவேந்தர்? விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

பிரதமரை திட்டிய துணைவேந்தர்? விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

பிரதமரை திட்டிய துணைவேந்தர்? விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!
Published on

காந்தி கிராம பல்கலைக்கழக துணை வேந்தர் மீதான புகார் குறித்து விசாரிக்க போலீஸாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் காந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ. இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்தேன். 2006ஆம் ஆண்டு முதல் கூடுதல் பொறுப்பாக தகவல் ஆய்வாளர் பொறுப்பையும் கவனித்து வருகிறேன். எனக்கு தகவல் ஆய்வாளர் பதவிக்கான ஊதியம் மற்றும் பணப் பலன்கள் கோரி காந்தி கிராமிய பல்கலைக்கழக துணை வேந்தர் நடராஜனிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மனு அளித்தேன். எனது மனு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும், அங்கிருந்து பல்கலைக்கழக மானியக்குழுவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் எனக்கு தகவல் ஆய்வாளர் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பணப் பலன்கள் வழங்க துணை வேந்தருக்கு பிரதமர் அலுவலகம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதன் பிறகும் எனக்கு பதவி உயர்வு, பணப் பலன்கள் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக துணை வேந்தர் நடராஜனை நேரில் சந்தித்து கேட்டபோது, எனது கோரிக்கையை ஏற்க மறுத்தார். அத்துடன் என்னையும், பிரதமரையும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக அம்பாதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸார் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. எனது புகாரின் பேரில் துணை வேந்தர் நடராஜன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், மனுதாரர் மனு தொடர்பாக காவல்துறையினர் விசாரிக்க வேண்டும், விசாரணையில் குற்றம் நடைபெற்றதற்கான முகாந்திரம் தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com