சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தல்: விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தல்: விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தல்: விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு

அம்பாசமுத்திரத்தின் பொட்டல் கிராமத்தில்  நடைபெற்ற சட்டவிரோத ஆற்று மணல் கடத்தல் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த கிறிஸ்டி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றித் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள பொட்டல் கிராமத்தில் M.Sand- குவாரிக்கு அனுமதி பெற்று, சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்து கேரள மாநிலத்திற்கு கடத்தி வந்துள்ளனர்.

இது குறித்து ஆய்வு செய்த வருவாய் துறையினரும், காவல்துறையினரும் சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கை காவல்துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணையை வேறு அமைப்பிற்கு  மாற்றி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை சேர்ந்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, “இந்த விவகாரத்தில், 27,000 கியூபிக் மீட்டர் ஆற்றுமணல் சட்டவிரோதமாக திருடப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலுக்கு உபயோகப்படுத்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டபோது,  அதில் அரசு வழங்கும் போக்குவரத்து அனுமதி சீட்டு கையெழுத்து இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதோடு, இந்த வழக்கில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது. கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் இந்த வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கபட வேண்டும். மணல் எடுக்க அனுமதி கொடுத்த இடத்தினை திடீர் ஆய்வு நடத்த வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இ.சகாய பிரதீபா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com