செனட் தேர்தல் தொடர்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் பிறப்பித்த அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த நாகம்மாள் மற்றும் வடசேரியைச் சேர்ந்த உஷா உள்பட 16 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், “நெல்லை மனோன்மனியம் சுந்தரானார் பல்கலைக்கழக கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணிபுரிகிறோம். நாங்கள் உட்பட 52 பேர் செனட் உறுப்பினர்களாக 2016-ல் தேர்வு செய்யப்பட்டோம். நாங்கள் செனட் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு 2 ஆண்டுகளாகியும் ஒரு முறை கூட செனட் கூட்டம் கூட நடத்தவில்லை. இந்நிலையில் செனட் தேர்தல் தொடர்பாக சிண்டிகேட் கூட்டங்களில் அனைத்து தீர்மானங்களை ரத்து செய்து, மீண்டும் தேர்தல் நடத்த பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவுப்படி, செனட் தேர்தல் வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 7ல் தொடங்கியது. தேர்தல் மார்ச் 16-ல் நடைபெற உள்ளது. ஏற்கெனவே செனட் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட எங்களை பணிபுரிய அனுமதிக்கவில்லை. எனவே செனட் தேர்தல் தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் பிறப்பித்த அறிவிப்பாணைக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும். எங்களை அழைத்து செனட் கூட்டம் நடத்த வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்புக்கு தடை விதித்தும், பல்கலைக்கழக பதிவாளர் பதிலளிக்க உத்தரவிட்டும் விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.