தினந்தோறும் 6 ஆயிரம் நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சி நடத்த எவ்வாறு அனுமதி கொடுக்க முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," ராஜபாளையம் அருகே தர்மாபுரம் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயிலில் கடந்த 32 வருடங்களாக விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி அன்று ஊர்வலம் மற்றும் பொது இடங்களில் சிலையை நிறுவி வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் தர்மாபுரம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயிலில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தியின் முதலாம் நாள் 25 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம், ஏழை எளிய மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்படும். மேலும் 25 ஏழை எளியோருக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி வழக்கமாக நடைபெறும். மேலும் விநாயகர் சதுர்த்தி நாளன்று ஐந்து ரதத்துடன் விநாயகர் ஊர்வலம் நடைபெறும்.
ஆகவே, இந்த ஆண்டும் பொதுமக்களின் பங்கேற்பின்றி உரிய பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி 5 சிலைகளுடன், விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி அளிக்க பல்வேறு அதிகாரிகளிடம் நேரில் சென்று மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழாவை, ஆகஸ்ட் 21 மற்றும் 22ம் தேதி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் விநாயகரை வைத்து வழிபடுவதற்கு அனுமதியும் பாதுகாப்பும் தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதி “கொரோனா தாக்கம் உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்க கூடிய சூழலில் தமிழகத்தில் தினந்தோறும் 6 ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் மனுதாரர் எவ்வாறு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்கிறார்? இதில் எவ்வாறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதிக்க முடியும்? இதனால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படலாம்தானே? எனவே இதுபோன்ற சூழலில் இந்த மனு தேவையில்லாத ஒன்று. இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரங்களை வீணடிக்க வேண்டாம்.
தற்போது இந்த மனுவிற்கு அவசரமும் கிடையாது. எனவே மனுதாரர் மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றம் அபராதம் விதிக்க நேரிடும்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.