ஆபாசமின்றி நடன நிகழ்ச்சிகளை நடத்தலாம்: உயர்நீதிமன்றம்
குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் ஆபாசமின்றி நடன நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
கோயில்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடைபெறுவதை எதிர்த்து திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழியைச் சேர்ந்த ராம்குமார் என்ற வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தார். அதில், ’கோவில் திருவிழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்துவது இந்து மக்களின் மனதை புண்படுத்துகிறது. பல இடங்களில் காவல்துறையும் இதனை கண்டுகொள்வதில்லை. இந்த நடனக்குழுவுக்கு அளிக்கும் பணம் கோயிலுக்கு வரும் காணிக்கையில் இருந்து தரப்படுகிறது. அது கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பயன்படுத்தாமல் இவ்வாறு செலவழிக்கப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக, குலசேகரப்பட்டினம் முத்துமாரியம்மன் கோவிலில் சென்ற ஆண்டு தசரா திருவிழாவில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிகளின் வீடியோ பதிவுகளை தாக்கல் செய்தார். இதனையடுத்து, நீதிபதிகள் சசிதரானா மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கலை என்ற பெயரில் ஆபாச நடனத்தை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இருப்பினும், கோவில்களில் நடைபெறும் கலாசார, கலை விழாக்களில் நீதிமன்றம் தலையிட முடியாது, ஆபாசமின்றி நடன நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று நீதிபதிகள் கூறினர்.