மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு
மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையானது, பிரசித்தி பெற்ற மடமாகவும் இருந்து வருகிறது. இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இதன் தற்போதைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும்.

இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போதைய மதுரை ஆதீனமான அருணகிரி ஆதீனம் தரப்பில் மதுரை விமான நிலையம் அருகில் உள்ள 1,191 ஏக்கர் நிலம், பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு (பவர் ஒப்பந்தம்) விடப்பட்டுள்ளது. இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது.

ஆதீன மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்யமுடியாது என சட்டம் உள்ளது. மேலும் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன. இவ்வாறு உள்ள நிலையில் ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே, சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தற்போதைய 293 வது ஆதீனமான ஞான சம்பந்தர் தரப்பில், "

*மறைந்த 292 வது ஆதீனம் இருந்தபோது இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது

* தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது

* ஆனால், சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கின்றனர். அவர்கள் பண பலமிக்கவர்களாக உள்ளனர்.

எனவே, நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்களை வெளியேற்ற உத்தரவிட வேண்டும்" என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், "மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com