madurai High court
madurai High courtpt desk

பல் உடைப்பு விவகாரம்: பாதிக்கபட்ட நபர் தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் புதிய உத்தரவு

பல் உடைக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர் தாக்கல் செய்த மனு மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
Published on

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பற்களை பிடுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அருண்குமார், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 'அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் என் மீது பதியப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை, கைது செய்யப்பட்ட விவரம், மருத்துவ பரிசோதனை, சிறையில் அடைத்த சிறைச்சான்று மற்றும் அம்பாசமுத்திர ஜேஎம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விவரங்களை தர உத்தரவிடவும்’ எனக்கூறி மனு தாக்கல் செய்திருந்தார். அதன் மீது நீதிமன்றம் இன்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனது மனுவில் அவர், “என் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோத காவலில் என்னை எடுத்து போலீசார் கடுமையாக தாக்கினார்கள். எனது 4 பற்களும் உடைக்கப்பட்டன. பிறகு இந்த வழக்கில் என்னை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் என் மீது பதியபட்ட வழக்கு விவரங்களை தர உத்தரவிடக்கோரி முன்னதாக அம்பாசமுத்திர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தேன். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி எனது அந்த மனு நிராகரிக்கப்பட்டது. எனவே அம்பாசமுத்திர நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, என் மீது பதியப்பட்ட குற்ற வழக்கின் அனைத்து விவரங்களையும் தர உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “காவல்துறையால் கொடூரமாக தாக்கப்பட்டு எனது பல் பிடுங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு ஆவணங்களை தரக்கோரி அம்பாசமுத்திரம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நான் மனுத்தாக்கல் செய்யதிருந்தேன். அந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது. வழக்கின் முக்கியத்துவம் கருதி அந்த ஆவணங்களை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, அருண்குமார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டது, மனு நிராகரிக்கபட்டதா அல்லது திருப்பி அனுப்பபட்டதா என நாளை அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com