ராஜீவ் கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு பரோல்: பேட்டியளிக்க கூடாது என நிபந்தனை

ராஜீவ் கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு பரோல்: பேட்டியளிக்க கூடாது என நிபந்தனை

ராஜீவ் கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு பரோல்: பேட்டியளிக்க கூடாது என நிபந்தனை
Published on

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு மார்ச் 5 முதல் மார்ச் 19-ம் தேதி வரை 2 வார கால பரோல் வழங்கி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள ரவிச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த 26 ஆண்டுகளாக நன்னடைத்தையுடன், தண்டனை கழிந்துவிட்ட நிலையிலும் சிறையில் உள்ளேன். 26 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே சாதாரண விடுப்பில் சென்றுள்ளேன். தற்போது எனது அம்மாவுக்கு 62 வயதாகிவிட்ட நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார். எனவே சொத்து மற்றும் வேளாண் விவகாரங்களை எனது தாயார் தனியாக கையாள இயலாத நிலையில் உள்ளார். குடும்பத்தின் சொத்துப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எனக்கு ஒரு மாதம் நீண்ட கால பரோலில் செல்ல அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது,  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறப்படும் பேரறிவாளனுக்கு சில மாதங்களுக்கு முன்பாக விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், ரவிச்சந்திரனுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஒரு மாத விடுப்பு வழங்க கூட தமிழக அரசு மறுத்து வருகிறது என தெரிவித்தார்.

அதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரவிச்சந்திரனின் உயிர் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை கருதியே அவருக்கு விடுப்பு வழங்கப்படவில்லை எனவும், கடந்த முறையும் இதே, காரணத்தை முன்வைத்தே விடுப்பு கோரப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், சிறைத்துறைத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடந்த முறை விடுப்பில் சென்றிருந்தபோது எவ்வித சொத்துப்பதிவும் செய்யப்படவில்லை எனவும், கடந்த முறை வீட்டை விட்டு வெளியே செல்ல அவர் அனுமதி கோராததால், வெளியே செல்ல அனுமதிக்கவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீதிபதிகள் விமலா - கிருஷ்ணவள்ளி அமர்வு, அரசியல் சார்ந்து பேசக்கூடாது, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் மார்ச் 5 முதல் 19-ம் தேதி வரை  சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர். மேலும், விடுப்பு காலங்களில் காவல்துறை பாதுகாப்புடன் வழக்கறிஞரை சந்திக்கவும், பதிவுத்துறை அலுவலகத்திற்கு செல்லவும், மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லவும், சொத்துக்களை பார்வையிடவும் அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com