மதுரை: ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி - பெண் ஊராட்சித் தலைவருக்கு குவியும் பாராட்டு

மதுரை: ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி - பெண் ஊராட்சித் தலைவருக்கு குவியும் பாராட்டு
மதுரை: ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி - பெண் ஊராட்சித் தலைவருக்கு குவியும் பாராட்டு

கொரோனா நோய்பரவல் காரணமாக பள்ளி செல்ல முடியாத மாணவ மாணவியர்களுக்கு, தனது சொந்த செலவில் கல்வி கற்க ஏற்பாடு செய்து முன் மாதிரியாக விளங்கும் பெண் ஊராட்சித் தலைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பிற்காக பயன்படுத்தும் செல்போன்களை கொண்டு மாணவ மாணவிகள் சில நேரங்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி பொழுதை கழித்து வருவதால் பெற்றோர்கள் கவலை அடைந்து உள்ளனர். கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்த கிராமப்புற ஏழை எளிய குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது.

இதனால் அங்குள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புக்கு தேவையான செல்போன் வாங்கித் தரவோ, அதற்கான இணைய வசதி பெறவோ கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர்.

இதனை உணர்ந்த மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அடுத்துள்ள திண்டியூர் ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி சந்திரசேகர் தனது சொந்த செலவில் திண்டியூர் ஊராட்சிக்குட்பட்ட திண்டியூர், வீரபாஞ்சான், ஓடைபட்டி, ராணுவ குடியிருப்பு உள்ளிட்ட 6 பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு, இதே ஊராட்சியைச் சேர்ந்த படித்து வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ள மாற்றுத்திறனாளி பெண்கள், கணவனை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை எளிய பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கி ஆசிரியர்களாக பணியமர்த்தி அப்பகுதி மாணவ மாணவிகள் கல்வி கற்க ஏற்பாடு செய்துள்ளார்.

அதோடு அங்கு வரும் மாணாக்கர்களுக்கு நாள்தோறும் சத்தான பயறு வகைகளும் வழங்க ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல் நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்டவைகளையும் இலவசமாக வழங்கி வருகிறார். இதற்கு சில தன்னார்வ அமைப்புகள் உதவ முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்துள்ளனர்.

மற்ற ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கெல்லாம் முன்மாதிரி ஊராட்சி மன்றத் தலைவராக விளங்கி வரும் இவரது இந்த இலவச கல்விச்சேவையை அக்கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com