“என் தாய் நிலம் போன்ற உணர்வை தருகிறது மதுரை”- மகாத்மா காந்தியின் பேத்தி நெகிழ்ச்சி

“என் தாய் நிலம் போன்ற உணர்வை தருகிறது மதுரை”- மகாத்மா காந்தியின் பேத்தி நெகிழ்ச்சி
“என் தாய் நிலம் போன்ற உணர்வை தருகிறது மதுரை”- மகாத்மா காந்தியின் பேத்தி நெகிழ்ச்சி

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார் காந்தியின் பேத்தி. மாலை அணிவித்தபின், “மதுரை விவசாயிகளின் தோற்றம்தான், காந்தியின் ஆடை மாற்றத்திற்கு காரணமானது. மதுரை எனது தாய் நிலம் போன்று என்னை உணரவைக்கிறது. இங்கிருக்கும்போது எனது குடும்பத்துடன் இருக்கும் உணர்வை பெறுகிறேன்” என பேசினார்.

சுதந்திரப் போராட்டத்தின் போது பொதுக்கூட்டத்திற்கு மதுரை வந்த மகாத்மாக காந்தி அரையாடை புரட்சியை ஏற்படுத்திய தினமான செப்.22 ஆம் தேதி, நாளையுடன் நூறாவது ஆண்டு முடிவடைந்து அனுசரிக்கப்படவுள்ள நிலையில் மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு வருகை தந்திருந்தா மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டசார்யா. அப்போது அங்குள்ள காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது காந்தியின் கொள்ளு பேரனான வித்தூர் பரதன் உடனிருந்தார்.

முன்னதாக காந்தி அருங்காட்சியக இயக்குனர் நந்தாராவ், காந்திய கல்வி நிறுவன முதல்வர் முத்துலட்சுமி ஆகியோர் காந்தியின் பேத்திக்கு கதர் ஆடை அணிவித்து வரவேற்றனர். இதனையடுத்து காந்தி அருங்காட்சியக ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தாரா காந்தி, "மதுரை எனது தாய் நிலம். இங்கு வந்ததில் ஆசீர்வதிக்கப்பட்டவளாய் உணர்கிறேன். என் குடும்பத்துடன் இருப்பது போல இருக்கிறேன். என் தாயின் ஆசிகள் என்னை சுற்றி இருப்பதாக உணர்கிறேன். இந்த மகத்தான நிலத்திற்கு எனது மரியாதையை காணிக்கை ஆக்குகிறேன். ஏழை மக்களின் முகமாக வாழ்ந்த காந்தியின் நூற்றாண்டு விழா நாளை கொண்டாடப்படுகிறது. நாளை ஒரு மிக சிறந்த நாள். இங்கிருந்த விவசாயிகளின் தோற்றம் காந்தியின் ஆடை மாற்றத்திற்கு ஒரு காரணமாகியது.

காந்தி ஆடையை மாற்றிக்கொண்டு இமயமலைக்கு சந்நியாசம் போகவில்லை, அவர் இங்கேயே இந்த ஏழை மக்களுடன் வாழ்ந்து அவர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அதே உடையுடன் தான் டெல்லி போன்ற குளிர் நிறைந்த நகரங்களிலும் காந்தி வாழ்ந்தார். எளிமையின் உதாரணமாக வாழ்ந்தவர் காந்தி. காந்தி ஆன்மீகத்தை பற்றி பேசவில்லை, ஆனால் அவரது வாழ்க்கையே ஆன்மீக நெறியை கொண்டிருந்தது.

என்னிடம் பலரும் காந்தியின் பேத்தியாகிய நீங்கள் அவரைப்போல அல்லாமல், அதிக உடை அணிகிறீர்களே என கேட்டிருக்கிறார்கள். நான் காந்தியை போல அல்ல, அவரிடம் இருந்து மாறுபட்டவள். ஆனால், காந்தி அணிந்திருந்த வெண்மை நிறத்தில் இருந்த பல நிறங்களை கண்டிருக்கிறேன். அவர் உடுத்தியிருந்த வெண்மை நிறம், உண்மை, தத்துவங்கள், வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட பல வண்ணங்களை உணர்த்தி இருக்கிறது. அவரது உடை மாற்றத்திற்கு காரணமாக இருந்த மதுரை மனிதர்களுக்கு என் மரியாதையை செலுத்துகிறேன்" என்றார்.

- மணிகண்டபிரபு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com