மதுரை கிழக்கில் களம் காண்கிறாரா மன்னன்? அதிமுக வகுக்கும் புதிய வியூகம்.!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது அமைப்பை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில், மதுரை அரசியலில் முக்கியமான மாற்றமாக திமுக நிர்வாகியும் மு.க. அழகிரி ஆதரவாளருமான எஸ்.ஆர். கோபி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே, மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயரும் மு.க. அழகிரி ஆதரவாளருமான PM மன்னன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்திருந்தார். தற்போது அதே அணியைச் சேர்ந்த எஸ்.ஆர். கோபியும் அதிமுகவில் இணைந்திருப்பது தென் மாவட்ட அரசியலில் பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
எஸ்.ஆர். கோபி நீண்ட காலமாக திமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினராகச் செயல்பட்டவர். தென் மாவட்டங்களில் முக்கிய தாக்கம் செலுத்திய மு.க. அழகிரி அவர்களின் நெருங்கிய ஆதரவாளராக அறியப்பட்டார். மதுரை அரசியலில் அழகிரிக்கு நெருக்கமான முக்கிய முகங்களாக பொட்டு சுரேஷ் மற்றும் எஸ்.ஆர். கோபி விளங்கினர். பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டதையடுத்து, அழகிரி அணியில் செயலில் இருந்த முக்கிய நபராக எஸ்.ஆர். கோபி செயல்பட்டார். மு.க. அழகிரி நீக்கப்பட்ட காலகட்டத்தில், அவருடன் நெருக்கமாக இருந்த மன்னன், எஸ்.ஆர். கோபி, இசக்கிமுத்து, முபாரக் மந்திரி, திருப்பரங்குன்றம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம் கார்த்திகேயன் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்நிலையில், மன்னன் மற்றும் எஸ்.ஆர். கோபி தற்போது அதிமுகவில் இணைந்துள்ளனர்.
கலைஞர் மு. கருணாநிதி மறைவிற்குப் பிறகு, திமுகவில் அரசியல் வாரிசு விவகாரம் தீவிரமானது. மு.க. ஸ்டாலின் தலைமையிலான அணியுடன் பல நிர்வாகிகள் இணைந்தனர். எஸ்.ஆர். கோபியும் அந்த கட்டத்தில் ஸ்டாலின் அணியுடன் செயல்பட்டார். இருந்தாலும் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படாத நிலை நீடித்தது. இதற்கிடையில், நீக்கப்பட்ட அழகிரி ஆதரவாளர்கள் தங்களை மீண்டும் திமுகவில் சேர்க்க வேண்டும் என மன்னிப்பு கடிதம் அளித்ததுடன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து மனுவும் வழங்கினர். தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், மன்னன் தலைமையிலான அணி மாற்று அரசியல் களத்தைத் தேர்வு செய்தது. அதன் விளைவாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த இணைவு மதுரை கிழக்கு தொகுதியில் நேரடி அரசியல் மோதலுக்கான சூழலை உருவாக்கியுள்ளது. திமுக அமைச்சராக உள்ள பி. மூர்த்தி அவர்களை எதிர்த்து, அதிமுக வேட்பாளராக PM மன்னன் களமிறங்க உள்ளார். இதன் மூலம் மதுரை கிழக்கு தொகுதி இந்த முறை கடும் போட்டிக்கான மையமாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் மதுரை முழுவதையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அழகிரி அணியின் முக்கிய முகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அதிமுகவில் இணைந்திருப்பது தென் மாவட்ட அரசியல் தன்மையை மாற்றக்கூடியதாக பார்க்கப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நகர்வு தேர்தல் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. மதுரை அரசியல் மீண்டும் தமிழக அரசியலின் முக்கிய கவன மையமாக மாறியுள்ளது.

