மதுரையில் ஒரு கிலோ கறிவேப்பிலை 100 ரூபாய்க்கு விற்பனை - விழிபிதுங்கும் சாமானியர்கள்!
மதுரையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியால் ஒருகிலோ கறிவேப்பிலையின் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது.
சாலையோர காய்கறி கடைகள் மற்றும் சந்தைகளில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கும் கருவேப்பிலை இன்றைக்கு ஒருகிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் மக்கள் அனைவரும் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் கருவேப்பிலையின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த மாதங்களில் கருவேப்பிலை கிலோவுக்கு 50-ல் இருந்து 60 வரை விற்பனையான நிலையில், தற்போது மதுரையில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் கறிவேப்பிலை ஒரு கிலோ 100 முதல் 140 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
கடைகளில் காய்கறிகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் இலவசமாக கறிவேப்பிலையை வாங்கி செல்லும் நிலையில், தற்போது விலைகொடுத்தால் தான் கறிவேப்பிலை, கொத்தமல்லி கிடைக்கும் என்ற நிலை உள்ளது.