அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை - நீதிபதிகள்

அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை - நீதிபதிகள்
அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை - நீதிபதிகள்

அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும் என்றால், தொடர்புடைய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள மரங்களை வெட்டிய நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தி தொடர்புடைய போலீசார் வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, குடகனாறு செயற்பொறியாளர் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர் அரவக்குறிச்சி அருகே மணமேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரேணுகோபால் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஈசநத்தம் கிராமம், குடகனாறு பிரதான கால்வாய் 32 - வது மதகு வழிவரும் துணை கால்வாய் நிலத்தில் வேம்பு, ஊஞ்சை, வேளான், வெப்பாளை ஆகிய மரங்கள் இருந்தன. இது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம். இந்த மரங்களை, மணமேட்டுப்பட்டியை சேர்ந்த வீரமலை, சுப்பிரமணி கூலியாட்கள் சிலருடன் சேர்ந்து கால்வாயில் உள்ள மரங்களை வெட்டி, கால்வாயையும் சேதப்படுத்தினர்.

இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு புகார் கொடுத்தேன். இருப்பினும் மரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொதுப்பணித்துறை கால்வாய் அருகே இருந்த மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சீமை கருவேல மரங்களைத்தான் மனுதாரர் குறிப்பிடும் நபர்கள் வெட்டி உள்ளனர் எனக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பில், நன்கு வளர்ந்த மரங்கள் வெட்டப்பட்டதற்கான புகைப்படங்களை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை. அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும் என்றால், தொடர்புடைய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். உரிய விசாரணை நடத்தி மரங்களை வெட்டிய நபர்கள் மீது தொடர்புடைய போலீசார் வழக்குபதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், மரங்களை வெட்டிய நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, குடகனாறு செயற் பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com