தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: நினைவஞ்சலி கூட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி
தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவஞ்சலி கூட்டம் நடத்த, உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று நிபந்தனைகளுடன் அனுமதியளித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22 ல் நடந்த பேரணியில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 16 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மே 22ல் முதலாமாண்டு நினைவஞ்சலி கூட்டம் அனுமதி கேட்டு, தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியை பாத்திமாபாபு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ’’அஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல்துறையினரிடம் ஏப்ரல் 26ம் தேதி மனு அளிக்கப்பட்டது. இதுவரை அனுமதி வழங்க வில்லை. இதனால் நாங்கள் குறிப்பிட்டிருக்கிற 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தர விட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அரசுத்தரப்பில், ‘‘மே 22ல் நினைவஞ்சலி கூட்டம் நடத்தினால் பிரச்னை வரும். மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால் வேறு தேதியில் கூட்டம் நடத்துவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
இந்த விசாரணையை நீதிமன்றம் இன்று ஒத்தி வைத்தது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கூட்டத்துக்கும் பேரணிக்கும் அனுமதி கேட்கப்பட்டது. இதை அரசு வழக்கறிஞர் கடுமையாக எதிர்த்தார். மறு நாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் அனுமதியளிக்கக் கூடாது என்றார்.
விசாரித்த நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் அஞ்சலி கூட்டத்தை மட்டும் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டது. பேரணிக்கு அனுமதி மறுத்துவிட்டது. ‘’இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் 250 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. தூத்துக்குடி பெல் ஓட்டலில் காலை 9 மணி முதல் 11 மணி வரைக்குள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும். முழுக் கூட்டத்தையும் காவல்துறை மற்றும் மனுதாரர் தரப்பில் தனித் தனியாக வீடியோ எடுக்க வேண்டும். யார், யார் கூட்டத்தில் பங்கேற்றார்கள் என்பதை தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் கொடுக்க வேண்டும்’’ என்று உயர்நீதிமன்ற கிளை அனுமதியளித்தது.