தண்ணீர் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி - மதுரை மாநகராட்சி அதிரடி
மதுரையில் தண்ணீர் விநியோகம் செய்யும் லாரிகளை ஜிபிஎஸ் மூலம் மாநகராட்சி நிர்வாகம் கண்காணித்து வருகின்றது.
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளை கொண்டதாகும். இதில் 16 லட்சம் மக்கள் தொகை கொண்டுள்ள நிலையில் நாள்தோறும் 216 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. காவிரி கூட்டுக் குடிநீர், வைகை முதலாவது மற்றும் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலமாகவும் 3863 நீருற்றுகள், 2850 போர்வெல்கள் மூலமாக குடிநீர் பெறப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை 138.09 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கும், மேடான பகுதிகளுக்கும் லாரிகள் டிராக்டர் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 36 லாரிகள் மற்றும் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டிராக்டர்கள் என மொத்தம் 61 வாகனங்கள் மூலமாக நாள்தோறும் 5 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியேகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் லாரிகள் மற்றும் டிராக்டர் மூலமாக விநியோகம் செய்யப்படும் குடிநீரில் முறைகேடு நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நீர் முழுமையாக விநியோகம் செய்யப்படாமல் தனியார் திருமண மண்டபங்கள், உணவகங்கள், வணிக நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகத்திற்கு பயன்படுத்தப்படக்கூடிய 61 லாரிகள் மற்றும் டிராக்டர் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தியுள்ளனர். இதன்மூலம் லாரிகளில் நிரப்ப வேண்டிய அளவிற்கான நீர் நிரம்பியதும், தண்ணீர் தானாக நின்றுவிடும். அத்துடன் லாரிகள் செல்லும் பாதை மற்றும் வேகத்தை கண்காணிக்க முடியும். இந்த ஜிபிஎஸ் செயலில் மூலம் முறையான தண்ணீர் விநியோகம் நடப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது.
மேலும் இதனை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் செல்போனில் கொண்டுவரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.