மதுரை - நம்பர் பிளேட்டால் அம்பலமான நூதன மோசடி..

மதுரை மாநகராட்சி ஒப்பந்த தண்ணீர் லாரிக்கு பதிலாக டூவீலரை கணக்கு காட்டி ஒரு கோடி ரூபாய் வரை நூதன முறையில் ஊழல் செய்யப்பட்டுள்ளது.
குற்றம் குற்றமே
குற்றம் குற்றமேபுதிய தலைமுறை

மதுரை நகர மக்களுக்கு வைகை அணையில் இருந்து 2 குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும் 180 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது. அது தவிர கோச்சடை, மணலூர் வைகை ஆற்று படுகைகளில் அமைக்கப்பட்ட கிணறுகள் மற்றும் இதர ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 30 மில்லியன் லிட்டர் நீர் பெறப்பட்டு மதுரை மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையை சார்ந்த காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியில் உள்ள மொத்த மண்டலங்களிலும் தனியார் ஒப்பந்த லாரிகள் மற்றும் டிராக்டர் எண்ணிக்கை குறித்தும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாநகராட்சி சார்பாக எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்பது குறித்தும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். அதில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களில் 100 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகள் முழுவதும் அத்தியாவசியத் தேவைக்கு ஒப்பந்த அடிப்படையில் 34 லாரிகள், 33 டிராக்டா்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு லாரிக்கும், டிராக்டருக்கும் பல்லாயிரக்கணக்கான ட்ரிப்புகளுக்கு லட்சக்கணக்கில் பணம் வழங்கப்படுகிறது. இதில் மதுரை மாநகராட்சி நூதன முறையில் ஊழல் செய்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அம்பலமாகி உள்ளது.

மதுரை மாநகராட்சியின் முதல் மண்டலத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் எட்டு தனியார் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், இருசக்கர வாகன பதிவு எண்ணை (TN 58 AS 1036) லாரியின் பதிவு எண்ணாக மாநகராட்சியில் பதிவு செய்து, இல்லாத லாரிக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.1 கோடி வரையில் வாடகை கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

அந்த வகையில் குறிப்பிட்ட அந்த பதிவை கொண்ட வாகனத்திற்கு 2020 ஆம் ஆண்டு மொத்தம் 4600 நடைக்கு, 35 லட்ச ரூபாயும், 2021 ஆம் ஆண்டு 6200 நடைக்கு 48 லட்ச ரூபாயும், 2022 ஆம் ஆண்டு 2100 நடைக்கு 17 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒப்பந்த லாரி ஒரு நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 லிருந்து 10 முறைதான் நடைக்கு செல்ல இயலும். ஆனால் மேற்கண்ட அந்த இருசக்கர வாகனத்தில் பதிவு கொண்ட வாகனத்தின் நடை கடந்த 2021 ஆம் ஆண்டு 12 மாதங்களில் மட்டும் 6200 நடை சென்றுள்ளது. அதாவது மாதத்திற்கு மாதத்திற்கு 516 நடையும், நாள் ஒன்றுக்கு 17 முறை நடையும் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு மட்டும் மேற்கண்ட அந்த பதிவில் கொண்ட வாகனத்திற்கு 47 லட்ச ரூபாய் மாநகராட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மதுபாலாவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கும் பொழுது, “மேற்கண்ட பதிவு எண் கொண்ட வாகனத்தின் எண்ணை தொடர்ச்சியாக கடந்த 27 மாதங்களாக தவறுதலாக தகவல் உரிமைச் சட்டத்தில் பதிவு செய்து விட்டார்கள். ஆனால் அந்த லாரியின் உண்மையான பதிவு எண் TN 14 K 1036 என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஜிபிஆர்எஸ் கருவியில் இந்த லாரியின் தொடர் செயலை கண்காணித்துதான் வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com