”போதைக்கு இளைஞர்கள் அடிமையாகி வன்முறைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறார்கள்” - திருமாவளவன்

”மதுரை மாவட்டத்தில் அண்மைக்காலமாக பல்வேறு பகுதிகளில் பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமை தாக்குதல் அதிகரித்து வருகிறது” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்thol.thirumavalavan twitter

இதுகுறித்து மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், “திருமோகூரில் நடந்த சாதிய வன்முறையை கண்டித்து ஒத்தக்கடை பகுதியில் நடத்தினால் பதற்றம் உருவாகும் என்ற நோக்கத்தில்தான் மதுரை மாநகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இது மற்ற சமூகத்தினருக்குப் புரிந்துகொள்ள வேண்டும். திருமோகூரில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வருகை தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கூறிய நிலையில், தற்போது வேண்டாம் என்று கூறினேன்.

நான் அங்கு சென்றால் தேவையற்ற பதற்றம் உருவாகும். உழைக்கும் மக்கள் இருதரப்பிலும் உள்ளனர். அதனால் பாதிக்கப்படக்கூடாது. ஒட்டுமொத்த மக்களும் வன்முறையை விரும்புவதில்லை. எளிய மக்களை ஒடுக்க நினைப்பதில்லை. ஒரு சில பிண்ணனி உள்ளவர்களின் பிழைகள்தான் ஒட்டுமொத்த கிராமத்திற்கு எதிராக திரும்பிவிடுகிறது. மதுரை திருமோகூரில் போதைக்கும், கஞ்சாவுக்கும் சில இளைஞர்கள் அடிமையாகி, வன்முறைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் இதுபோன்று ஒருசில இளைஞர் கும்பல்கள்தான் பிரச்னை நடக்கிறது. காவல் துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுத்தால் இருதரப்பு சமூக மோதலை தடுத்து சமதானம் ஏற்படும். காவல்துறை உயரதிகாரிகள் அப்படி இருந்தாலும், ஒருசில கீழே உள்ள காவல்துறை அதிகாரிகள் ஒரு சார்பாக இருப்பதால் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது.

மதுரை மாவட்டதில் அண்மைக்காலமாக பல்வேறு பகுதிகளில் பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமை தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் உள்நோக்கமோ, காவல் துறைக்கு எதிரான போராட்டமோ இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம். சிலர், இந்த ஆர்ப்பாட்டத்தைத் தமிழக அரசுக்கு எதிராக எனக் கூறுவார்கள் அதனை கண்டுகொள்ளக் கூடாது” என்றார்.

மதுரை- திருமோகூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அண்மையில் நடைபெற்ற சாதிய வன்கொடுமைகளைக் கண்டித்து மதுரை - கோ.புதூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com