\
Madurai Collector Moved After Revenue Scam Action
ஆகாஷ் ஐ.ஏ.எஸ்எக்ஸ் தளம்

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு | அதிரடி காட்டிய ஆட்சியர் ஆகாஷ்... 20 நாட்களில் இடமாற்றம் ஏன்?

பழைய கணக்கீட்டு முறைகளை மாற்றி, சதுர அடி அடிப்படையில் சொத்துவரியை துல்லியமாகக் கணக்கிடவேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
Published on

மதுரை மாவட்ட ஆட்சியராக கடந்த ஜூன் 1-ஆம் தேதி பொறுப்பேற்ற ஆகாஷ், பொறுப்பேற்ற 20 நாட்களிலேயே இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் இடமாற்றத்திற்குப் பின்னணியில் மாநகராட்சி வரி முறைகேடுகள் தொடர்பாக அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளும், சில செல்வாக்குமிக்க தரப்பினருடன் ஏற்பட்ட முரண்பாடுகளும் காரணமாக இருக்கலாம் என பேசப்படுகிறது.

மதுரை மாநகராட்சியில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்ததாகக் கூறப்படும் சொத்து வரிகணக்கீட்டு முறைகேடுகள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், ஆட்சியர் ஆகாஷ் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு ஆய்வு மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகள், பெரிய வணிகவளாகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களில் வரி கணக்கீடு முறையாக நடைபெறவில்லை என்றும், சில இடங்களில் குறைவான வரி நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, பழைய கணக்கீட்டு முறைகளை மாற்றி, சதுர அடி அடிப்படையில் சொத்துவரியை துல்லியமாகக் கணக்கிடவேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சிஎக்ஸ் தளம்

மாநகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனைகள் நடத்தி, மாநகராட்சி முழுவதும் வரி அளவீடு மற்றும் மறுகணக்கீட்டு பணிகளை தீவிரப்படுத்தவும் அவர் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கையால், நீண்டகாலமாக குறைந்த வரி செலுத்தி வந்ததாகக் கூறப்படும் சில பெரிய வணிக நிறுவனங்களும், அரசியல் மற்றும் நிர்வாகத் தொடர்புகள் கொண்ட செல்வாக்குமிக்க நபர்களும் பாதிக்கப்படலாம் என்ற சூழல் உருவானதாக கூறப்படுகிறது. இதனால், ஆட்சியரின் நடவடிக்கைகள் சில செல்வாக்குமிக்க தரப்பினருக்கு விருப்பமில்லாத ஒன்றாக மாறியதாக பேசப்படுகிறது.

அதேநேரத்தில், மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளில் ஆட்சியர் நேரடியாக தலையிட்டு, கோப்புகளை ஆய்வுசெய்தது, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டது, வரி மறுகணக்கீட்டு பணிகளை வேகப்படுத்த உத்தரவிட்டது போன்றவை சில மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த நிர்வாக செயல்முறைகள் கேள்விக்குள்ளானதால், அதிகாரிகள் தரப்பிலும் எதிர்ப்பு உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன், மாவட்டத்தின் முக்கிய அரசியல் மற்றும் அதிகார மையங்களை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க ஆட்சியர் ஆகாஷ் மறுத்ததாகவும், தனது நிர்வாகப் பணிகளில் வெளிப்புற தலையீடுகளை ஏற்க விரும்பாத அணுகுமுறையைக் கடைப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆகாஷ் ஐ.ஏ.எஸ்
ஆகாஷ் ஐ.ஏ.எஸ்

இதுவும் சில அதிகாரமையங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆட்சியராக இருந்த குறுகிய காலத்திலேயே, இ-ஃபைலிங் முறையை அறிமுகப்படுத்தி நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்கியது, பொதுமக்களின் நீண்டநாள் மனுக்களுக்கு விரைவாகத் தீர்வு கண்டது, சமணர் படுக்கை, திருமலை நாயக்கர் மஹால் மற்றும் அரிட்டாபட்டி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்தியது போன்ற பல நடவடிக்கைகளையும் ஆகாஷ் மேற்கொண்டிருந்தார். மாநகராட்சி வரி முறைகேடுகள் மீது ஆட்சியர் காட்டிய தீவிரம், அதனால் பாதிக்கப்படலாம் எனக் கருதப்பட்ட செல்வாக்குமிக்க நபர்களின் அதிருப்தி, மாநகராட்சி அதிகாரிகளின் எதிர்ப்பு மற்றும் அரசியல் அழுத்தம் ஆகியவை ஒன்றிணைந்ததே அவரது திடீர் இடமாற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்ற கருத்து பல்வேறு தரப்பினரிடையே நிலவிவருகிறது. எனினும், இந்த இடமாற்றத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் குறித்து அரசு இதுவரை எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com