உலகமே என்னை பாராட்ட வாஜ்பாய் தான் காரணம்: சின்னப்பிள்ளை புகழாரம்
உலகமே தன்னை பாராட்ட, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தான் காரணம் என மதுரையைச் சேர்ந்த மூதாட்டி சின்னப்பிள்ளை புகழாரம் சூட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியை சேர்ந்த சின்னப்பிள்ளை, களஞ்சியம் எனும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கிராமப் பெண்களிடையே சிறு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்தினார். அதனைத்தொடர்ந்து 2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் சின்னப்பிள்ளைக்கு ஸ்த்ரீ சக்தி புரஷ்கார் விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் விருது வழங்கிய அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து ஆசி பெற்றது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ந்து போன சின்னப்பிள்ளை, மறைந்த பிரதமர் வாஜ்பாயின் காலில் விழுந்து தானும் ஆசி பெற்றார். இந்நிலையில் வாஜ்பாயின் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சின்னப்பிள்ளை தெரிவித்துள்ளார்.