மதுரை: சிறப்பு வாகனசோதனை.. தெளிவில்லாத நம்பர் பிளேட்டுடன் வாகனங்களை ஓட்டிவந்த 768பேர் மீது நடவடிக்கை
மதுரை மாநகரில் இருசக்கர வாகனங்களில் நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் தெளிவாக தெரியாத வகையிலும் மாற்றியமைத்து செல்போன் பறிப்பு மற்றும் நகை பறிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தது. இந்நிலையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களும் காவல்துறையின் சிசிடிவி மற்றும் ஏஎன்பிஆர் கேமராக்களில் சிக்காமல் இருக்க நம்பர் பிளேட் இல்லாமல் தங்களது வாகனங்களை இயக்குவதும் தெரியவந்தது.
இக்குற்றச் சம்பவங்களை கண்டறிந்து தடுக்கும் வகையில் மதுரை மாநகரில் கடந்த 2 நாட்களில் நடைபெற்ற சிறப்பு வாகன தணிக்கையில் நம்பர் பிளேட் இல்லாத 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதன் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் நம்பர்கள் தெளிவாக தெரியாதவாறு நம்பர் பிளேட் அமைத்து இயக்கிய 751 வாகனங்கள் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து சரியான நம்பர் பிளேட் மாற்றியமைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து நம்பர் பிளேட் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அதன் ஓட்டுனர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் உரிய போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து வாகனங்களை ஓட்டுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.