மாடுபிடி வீரர்களுக்கு 12 ரூபாய் ப்ரிமீயத்தில் ஆயுள் காப்பீடு கட்டாயம் !
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் 12 ரூபாய் ப்ரிமீயம் செலுத்தி இரண்டு லட்ச ரூபாய்க்கான ஒரு வருட காப்பீடு கட்டாயமாக எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. ஆண்டாண்டு காலமாக காளைகளை அடக்கி ஜல்லிக்கட்டை சிறப்பாக கொண்டாடி வந்துள்ளனர் நம் தமிழக மக்கள். அப்படிப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் விதித்தது. இதனையடுத்து தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான அனுமதியை பெற்றனர்.
இப்படிப்பட்ட வீர விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்கள், காளைகள் முட்டி தூக்கி வீசியெறிருந்துவிடுவதால் சில நேரங்களில் மரணிக்கும் துர்சம்பவங்களும் நடப்பதுண்டு. ஆனாலும் தங்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் அசராமல் அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர். வீரர்கள் ஜல்லிக்கட்டின்போது மரணித்தால் சில நேரங்களில் அரசு இழப்பீடு வழங்கும். இல்லையென்றால் எதுவும் கிடையாது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் 12 ரூபாய் ப்ரிமீயம் செலுத்தி இரண்டு லட்ச ரூபாய்கான ஒரு வருட காப்பீடு கட்டாயமாக எடுத்துக் கொள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ், வங்கிக்கு சென்று இந்த காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம். காப்பீடு பிரிமீயமாக 12 ருபாய் செலுத்தினால் போதும். மதுரை மாவட்டத்தில், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து மாடுபிடி வீரர்களும் இந்த காப்பீடை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பங்கேற்கும் வீரர்கள் மன அழுத்தம் இல்லாமல் பங்கேற்கலாம் என மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொதுவாகவே ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் எந்தவொரு காப்பீடு திட்டத்திலும் தங்களை இணைத்துக் கொள்ளாதவர்களாகவே இருக்கின்றனர். எனவே இந்த காப்பீடு திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த காப்பீட்டை பெற்றுவிட்டால், தமிழகத்தில் நடைபெறும் எந்தவொரு ஜல்லிக்கட்டு போட்டியிலும் பங்கேற்று துரதிஷ்டவசமாக மரணத்தை சந்திக்க நேர்ந்தால் மாடுபிடி வீரர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் செல்லும். மாடுபிடி வீரர்களும் இந்த காப்பீடு திட்டத்தை வரவேற்றுள்ளனர்.