11 மணி நேர போராட்டம்... மதுரை கட்டிட விபத்தில் உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு
மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
மதுரை - செக்காணூரணியில் கட்டிட ஒப்பந்ததாரர் மாதவன் என்பவர் கட்டி வரும் வீட்டில் 2 அடுக்கு கட்டிட வேலைகள் முடிந்து, 3-வது அடுக்கு வேலைகள் நடந்து வந்தன. நேற்று மாலை திடீரென கட்டிடம் 5 அடி ஆழத்துக்கு பூமிக்கடியில் புதைந்ததோடு, 2 வது மாடி கட்டிடம் முற்றிலும் சரிந்தது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலார்கள் 7 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.
தகவலறிந்து வந்த திருமங்கலம், உசிலம்பட்டி தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களில், ராஜேஷ், முருகன், கார்த்திக், காசிநாதன் ஆகிய 5 பேரை அடுத்தடுத்து மீட்டனர். அவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் காசிநாதன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ள அருண், பாலமுருகன் ஆகிய 2 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. 11 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு இன்று காலை 4 மணி அளவில் அருண், பாலமுருகன் ஆகியார் சடலமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது.
இதனிடையே விபத்து நேரிட்ட இடத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் பார்வையிட்டனர். கட்டிட உரிமையாளர் மாதவனை செக்காணூரணி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே கிணறு இருந்த இடத்தில் வீடு கட்டப்பட்டதால், கட்டிடம் சரிந்து விட்டதாகவும், வீடு கட்ட உரிய அனுமதி பெறப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.