‘மதுரக்காரங்கனாலே பாசக்காரங்கதானே...’- தன் ஜல்லிக்கட்டு காளையோடு புகுந்த வீட்டுக்கு சென்ற மணப்பெண்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டையைச் சேர்ந்த சிவப்பிரியா என்பவருக்கும், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜபாண்டிக்கும் நேற்று 22.05.2023 தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவின் நாயகியான மணமகள் சிவப்பிரியா பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருவதோடு, பாரம்பரியம் மாறாமல் ஜல்லிக்கட்டு காளையையும் வளர்த்து வந்தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று திருமணம் முடிந்த கையோடு தான் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையையும் மணமகள் சிவப்பிரியா புகுந்த வீட்டிற்கு அழைத்துச் சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஜல்லிக்கட்டு காளையை மணமேடையில் ஏற்றி மணமகனுக்கு அறிமுகம் செய்தனர் பெண்வீட்டார். தொடர்ந்து மணமகனும், மணமகளும் ஜல்லிக்கட்டு காளைக்கு முத்தமிட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில், பாரம்பரியம் மாறாது தான் வளர்த்த காளையை புகுந்த வீட்டிற்கு மணமகள் அழைத்துச் சென்றது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.