மாணவர்களிடையே குடிபழக்கம்...மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் - மதுரைக்கிளை எச்சரிக்கை

மாணவர்களிடையே குடிபழக்கம்...மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் - மதுரைக்கிளை எச்சரிக்கை
மாணவர்களிடையே குடிபழக்கம்...மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் - மதுரைக்கிளை எச்சரிக்கை

சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியைத் தருகிறது. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது? என தெரியவில்லை என மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"தமிழகத்தில் கடந்த 2018ல் ஆண்டிலிருந்து 31,244 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் 36 சதவீதமாகவும், தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் 46.7 சதவீதமாகவும் உள்ளது. மது அருந்தும் பழக்கத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை செயல்படுகின்றன. இரவில் மது போதையில் வாகனத்தில் செல்வோரால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. மது விற்பனைக்கு எதிராகவும், மதுக்கடைகளை மூடவும் வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இருப்பினும் மது விற்பனை அதிகரித்து வருகிறது.

எனவே தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதித்தும், மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்கவும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் வைக்கவும், மது விற்பனைக்கு ரசீது வழங்கவும், கூடுதல் விற்பனைக்கு மது விற்றால் புகார் அளிக்க உயர் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் விபரங்களை டாஸ்மாக் கடைகளில் எழுதி வைக்கவும், மதுபான பாட்டில்களில் அதில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர் விபரங்களை தமிழில் குறிப்பிடவும், டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மாணவர்கள் சீருடையுடன் மது அருந்துவது தொடர்பான புகைப்படங்கள் வழங்கப்பட்டன.

அதனைப்பார்த்த நீதிபதிகள், "இதுபோன்ற வழக்கைத் தொடர்ந்த மனுதாரரை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியைத் தருகிறது. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது? என தெரியவில்லை. இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரர் தொடர்ச்சியாக இந்த வழக்கு தொடர்பான விபரங்களைத் திரட்ட உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com