ப்ளூவேல் கேமை 75 சிறுவர்கள் விளையாடுகிறார்கள் - இறந்த மாணவரின் தாய் பகீர் தகவல்
மதுரையில் ப்ளூவேல் கேம் விளையாடி உயிரிழந்தவருடன் தொடர்புடைய 75 பேர் ப்ளூவேல் கேம் விளையாடுவதாக வெளியான தகவல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் ப்ளூவேல் கேம் விளையாடி உயிரிழந்தார். இதுகுறித்து கூறும் விக்னேஷின் தாயார் மேலும் 75 பேர் ப்ளுவேல் கேம்மில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைத்து, குற்றப்பிரிவினர் மற்றும் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி விக்னேஷின் உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் ப்ளுவேல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக விக்னேஷின் செல்போனை கைப்பற்றியுள்ள குற்றப்பிரிவினர் அதிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து கூறும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தீவிரமாக கண்காணித்து யாரேனும் ப்ளூவேல் விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி யாரேனும் ப்ளூவேல் கேம் விளையாடுவதாக சந்தேகம் எழுந்தால், 77088 - 06111 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் அளிக்கலாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.