ஓடையில் கொட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் ஆபத்தை விளைவிக்கக் கூடியதா?- நீதிமன்றம் கேள்வி

ஓடையில் கொட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் ஆபத்தை விளைவிக்கக் கூடியதா?- நீதிமன்றம் கேள்வி

ஓடையில் கொட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் ஆபத்தை விளைவிக்கக் கூடியதா?- நீதிமன்றம் கேள்வி
Published on

உப்பாற்று ஓடையில் தனியார் இடத்தில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 

தூத்துக்குடி மாவட்டதை சேர்ந்த காந்திமதிநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டம் உப்பாற்று ஓடையில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஸ்டெர்லைட் ஆலை கந்தக ரசாயன கழிவுகள் ஆற்றில் குவிக்கபட்டுள்ளதால், வெள்ளபெருக்கால் தண்ணீர் திசை திருப்பபட்டு தூத்துக்குடி நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக தனியார் பட்டா நிலங்களில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ரசாயன தாமிரக் கழிவுகள் (Copper Slags) அனுமதியின்றி கொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதை தனிநபரின் லாபத்திற்காக தனியார் நிறுவனத்திற்கு விற்க முயற்சிக்கின்றனர். மேலும் உப்பாற்று ஓடையில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது சம்பந்தமாக உயர்நீதிமன்றதில் வழக்கு தொடரப்பட்டது. அதில், நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை பின்பற்றாமல் தனி நபரின் லாபத்திற்காக உப்பாறு ஓடையில் உள்ள ரசாயன தாமிரக் கழிவுகளை விற்க முயற்சிப்பது சட்ட விரோதமானது. எனவே உப்பாறு ஓடையில் உள்ள ரசாயன தாமிரக் கழிவுகளை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்ய தடைவிதித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், 2018 - ஆம் உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தும் தற்போது வரை செயல்படுத்தப்படாமல் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

1) ஓடையில் கொட்டப்பட்ட கழிவுகள் ஆபத்தை விளைவிக்கக் கூடியதா?

2) ஓடையில் காப்பர் கழிவுகளை கொட்டியவர்கள் யார்?

3) 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தற்போது வரை ஏன் செயல்படுத்தவில்லை ?

என்பது குறித்து 12 வாரங்களில் தமிழக பொதுப்பணித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் உப்பாற்று ஓடையில் தனியார் இடத்தில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய இடைக்கால தடைவிதித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com