”அரசு மருத்துவரின் அலட்சியத்தால் குழந்தையுடன், கர்ப்பப்பையை இழந்தேன்” - பெண் வேதனை புகார்

”அரசு மருத்துவரின் அலட்சியத்தால் குழந்தையுடன், கர்ப்பப்பையை இழந்தேன்” - பெண் வேதனை புகார்
”அரசு மருத்துவரின் அலட்சியத்தால் குழந்தையுடன், கர்ப்பப்பையை இழந்தேன்” - பெண் வேதனை புகார்

மணப்பாறை அரசு மருத்துவமனை மருத்துவரின் அலட்சியத்தால் தனது குழந்தையையும், கர்ப்பப்பையையும் இழந்தப் பெண், தனக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரிய வழக்கில், தமிழக உள்துறைச் செயலர் மற்றும் தமிழக சுகாதாரத் துறை செயலர், திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நதியா என்றப் பெண் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் "நான் திருமணமாகி புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வருகிறேன். நான் கருவுற்ற நாளிலிருந்து தொடர்ச்சியாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டு வந்தேன். குழந்தையின் பிரசவத்திற்காக, மணப்பாறை அரசு பொது மருத்துவமனையில் 28.12.2021-ல் அனுமதிக்கப்பட்டேன்.

மணப்பாறை அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய மருத்துவர் மோகனசுந்தரி, எனக்கு சுகப்பிரசவம் ஆக வாய்ப்பில்லை எனவும், அவரது கணவருடைய மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டால் சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தனர். அதற்கு நாங்கள் மறுத்ததால், எங்களை கடுமையாக திட்டினார். இதனிடையில் அன்று இரவு பிரசவ வலி ஏற்பட்டு, பிரசவம் நடைபெற்ற நிலையில், ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். பிரசவத்தின் போது மருத்துவர் மோகனசுந்தரியின் அலட்சியப் போக்கால் எனது குழந்தையின் தலையில் பாதிப்பு ஏற்பட்டது. எனது கருப்பையிலும் பாதிப்பு ஏற்பட்டது.

எனது குழந்தை பிறந்து எந்த விதமான உணர்வும் இல்லாத காரணத்தினால், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி எனது குழந்தை உயிரிழந்து விட்டது. மேலும் எனக்கு தொடர்ச்சியாக வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக என்னையும் அரசு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு என்னை பரிசோதித்த மருத்துவர்கள், ‘நான் உயிர் பிழைக்க வேண்டுமென்றால் எனது கர்ப்பப்பை அகற்ற வேண்டும். பிரசவத்தின் போது அதில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது’ என தெரிவித்தனர். இதனால் எனது கர்ப்பப்பை அகற்றப்பட்டது. மணப்பாறை அரசு பொது மருத்துவமனையில் உள்ள மருத்துவர் மோகனசுந்தரி மற்றும் உதவியாளரின் அலட்சியப் போக்கால் எனது குழந்தை மற்றும் எனது கர்ப்பப்பையை இழந்துள்ளேன். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவரின் அலட்சியப் போக்கால் எனது குழந்தை மற்றும் கர்ப்பப்பையை இழந்த எனக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு, வழக்கு குறித்து தமிழக உள்துறைச் செயலர், தமிழக சுகாதாரத்துறை செயலர், திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com