மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தொடர்ந்து அழுத்தம் தரப்படும் - சு.வெங்கடேசன் எம்பி
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை மாநில அரசிடமிருந்து மத்திய அரசுக்கு வகை மாற்றம் செய்வதற்கு ஒன்றே முக்கால் ஆண்டுகள் எடுத்துக் கொண்டார் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை உயர்நீதிமன்ற உத்தரவின்படி விரைவாக தமிழகம் கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை இடமாற்றம் செய்யக் கூடிய பிரச்னை மட்டும் அல்ல. அங்கு அந்த கல்வெட்டுக்கள் குறித்து ஆய்வுகள் செய்வதற்கு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மேலும் தமிழகத்தில் கல்வெட்டு குறித்து படிக்க கூடிய மாணவர்கள் அந்த கல்வெட்டுகளை எளிதில் அணுக இயலவில்லை. எனவே, இந்த கல்வெட்டுகளின் இடமாற்றம் என்பது சமூக மக்கள் அந்த கல்வெட்டில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும் என்றே கருதுகிறேன்” என்றார்.
மேலும், பேசிய அவர், “மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் மாணிக் தாகூர் அவர்களும் தொடர்ச்சியாக இதில் தலையிட்டு கொண்டிருக்கிறோம். வருகின்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பாக இது குறித்து தென்மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒவ்வொரு பணியையும் தொடர்ச்சியாக கண்காணித்து அதற்கான அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கூறியது போல கடந்த ஆண்டுகளில் மெத்தனம் இருந்ததை நாம் பார்க்கிறோம். இனியும் அது தொடராமல் அரசியல் ரீதியாக அனைத்து அழுத்தத்தையும் கொடுப்போம்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருப்பரங்குன்றம் பகுதியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை மாநில அரசிடமிருந்து மத்திய அரசுக்கு வகை மாற்றம் செய்வதற்கு ஒன்றே முக்கால் ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். மக்கள் மீது எந்த ஒரு அக்கறையும் இல்லாத அரசாகத்தான் கடந்த காலங்களில் இருந்துள்ளனர். இப்போது மதுரை மேற்குத் தொகுதிக்கு அரசுக் கல்லூரி வேண்டும் என ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதிக்காக பேசுவது வரவேற்கத்தக்கது. அதனை தமிழக அரசு படிப்படியாக செய்ய வேண்டும் என நானும் வலியுறுத்துகிறேன்” என்றார்.