அங்கே, இங்கேனு இறுதியில் மதுரையில் அமையும் எய்ம்ஸ்
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரையில் அமைய இருப்பது உறுதியாகியிருக்கிறது.
தமிழகத்தின் 2வது மருத்துவ தலைநகரமாக விளங்கும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ஆண்டு தோறும் 27 லட்சம் பேர் வெளி நோயாளிகளாகவும், 9 லட்சம் பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். எனவே, எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும் என்பது 15 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
அதன்படி மத்திய அரசின் எய்ம்ஸ் பட்டியலில் மதுரை இடம் பிடித்தது. 2013ஆம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை செயலாளரும் மதுரை தோப்பூரில் உள்ள 200 ஏக்கர் இடத்தை பார்வையிட்டு சென்றார். இந்நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக புதியதலைமுறைக்குப் பேட்டி அளித்த அவர், மதுரையில் எய்ம்ஸ் அமைவது தொடர்பாக தமக்கு அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார்.