மன்னிப்புக் கோரினார் நித்யானந்தா

மன்னிப்புக் கோரினார் நித்யானந்தா
மன்னிப்புக் கோரினார் நித்யானந்தா

மதுரை ஆதினத்தின் 293வது மடாதிபதியாக தனக்குத்தானே அறிவித்துக் கொண்டதை திரும்ப பெற்று கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை ஆதீனத்தின் 293- வது மடாதிபதியாக (குரு மகா சன்னிதானமாக) நித்யானந்தா தனக்குதானே அறிவித்துக் கொண்டதை எதிர்த்தும், ஆதீனத்துக்குள் நுழைய தடை செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையை சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த  நீதிமன்றம், மதுரை ஆதீனத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்குத் தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி, நித்யானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 293வது  மடாதிபதியாக தான் முறைப்படி நியமனம் செய்யப்பட்டதாகவும், தன்னைப் பதவி நீக்கம் செய்ய மடத்தின் தலைவர் உள்பட யாருக்கும் அதிகாரம் கிடையாது என்றும், எனவே, மதுரை ஆதினத்துக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி இருந்தார். 
 
இந்த வழக்கில், தமிழக அரசு அளித்த பதிலில், உயிருடன் மடாதிபதி ஒருவர் இருக்கும்போது புதிதாக மற்றொரு மடாதிபதியை நியமிக்க முடியாது என்றும், மதுரை ஆதினத்தின் நடைமுறைக்கு எதிரானது என்றும், நித்யானந்தா தனக்குத்தானே இளைய மடாதிபதியாக அறிவித்துக் கொண்டது சட்ட விரோதமானது என்று தெரிவித்தது.    

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். மகாதேவன், 293வது மடாதிபதி என கூறிக்கொள்ளும் பகுதியை நீக்கி மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இரண்டு மாதமாக புதிய மனுத்தாக்கல் செய்யாத நிலையில், பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் பதில் மனுத்தாக்கல் செய்யாவிட்டால் கைது செய்ய நேரிடும் என எச்சரித்தார். 

இந்த வழக்கில் நித்தியானந்தா தாக்கல் செய்துள்ள மனுவில், மதுரை ஆதினத்தின் 293 வது இளைய மடாதிபதி என குறிப்பிட்ட பகுதிகளை திரும்பப்பெறுவதாகவும், அப்படி குறிப்பிட்டதற்காக வருத்தம் தெரிவிப்பதுடன் மன்னிப்பு கோரியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மகாதேவன் உயர் நீதிமன்ற வழக்கு மற்றும் மதுரை உரிமையியல் நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக இரண்டு வாய்ப்புகள் வழங்கியுள்ளர்.

அதன்படி, மதுரை சிவில் நீதிமன்ற வழக்கு முடியும் வரை ஆதினத்துக்குள் நுழைய மாட்டேன் என நித்யானந்தா சார்பில் பிரமான பத்திரம் தாக்கல் செய்தால், அதனை ஏற்று ஜெகதலப்பிரதாபன் வழக்கில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்காமல் முடித்து வைக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். அல்லது ஜெகதலபிரதாபன் வழக்கை தொடர்ந்து நடத்திட விருப்பப்பட்டால், அதை உயர்நீதிமன்றம் முழுமையாக விசாரித்து வழக்கின் தன்மைக்கு ஏற்ப உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாய்ப்புகளில் நித்தியானந்தா எதை தேர்ந்தெடுக்கிறார் என பிப்ரவரி 26ஆம் தேதி தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com