எம்.ஜி.ஆர் சிலையின் கல்வெட்டை அகற்றியதாக செல்லூர் ராஜூ மீது முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு
மதுரையில் ஜெயலலிதா திறந்து வைத்த எம்.ஜி.ஆர் சிலையின் கல்வெட்டை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அகற்றியதாக முன்னாள் எம்.எல்.ஏ ராஜாங்கம் குற்றச்சாட்டியுள்ளார்.
2001 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் மதுரை கே.கே நகரில் எம்.ஜி.ஆரின் வெங்கல சிலை திறந்து வைக்கப்பட்டது. சிலை திறந்து வைக்கப்பட்டதன் நினைவாக ஜெயலலிதா பெயரில் சிலைக்கு கீழே ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவையொட்டி எம்.ஜி.ஆர் சிலை அருகே 2019 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு ஒரு வெங்கலசிலை வைக்கப்பட்டது, இப்பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மேற்கொண்டார்.
இந்நிலையில் நேற்று இரவு ஜெயலலிதா பெயர் இருந்த பழைய கல்வெட்டை அகற்றி விட்டு புதிய கல்வெட்டை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு வைத்துள்ளதாகவும், பழைய கல்வெட்டு அகற்றப்பட்டது தொடர்பாக தலைமை கழகத்திற்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், பழைய கல்வெட்டை வைக்கவில்லை என்றால் செல்லூர் கே.ராஜு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர்.ராஜாங்கம் செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜுவிடம் தொலைபேசி வாயிலாக விளக்கம் கேட்ட போது 'வெங்கல சிலைகள் புதுப்பிக்கப்பட்டதால் புதிய கல்வெட்டு வைக்கப்பட்டது, பழைய கல்வெட்டு அகற்றியதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை, மீண்டும் அதே இடத்தில் பழைய கல்வெட்டு நிறுவப்படும்' என கூறினார்.