மதுரை: அனுமதியின்றி குடோன்களில் செயல்படும் 70% மழலையர் பள்ளிகள்- வெளியான அதிர்ச்சி தகவல்
மதுரை மாவட்டத்தில் 70 சதவீத மழலையர் துவக்கப் பள்ளிகள் உரிய அனுமதியின்றி செயல்படுவது கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் மதுரை மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் என நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் மழலையர் தொடக்கப் பள்ளிகளில் பெரும்பாலானவை அரசின் அங்கீகாரம் இன்றி, உரிய இடவசதியின்றி குடோன்கள், மாடிகள் போன்ற இடங்களில் இயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை கொடுத்திருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதிலும் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு சென்று நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க கூறியிருந்தார். அதன்படி 4 கல்வி மாவட்டங்களிலும் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வு முடிவில் மதுரை மாவட்டம் முழுவதும் மொத்தமாக 72 மழலையர் பள்ளிகளில் 48 பள்ளிகள் அரசின் உரிய அங்கீகாரம் இன்றியும், 2 பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பித்து உள்ளதும், 22 பள்ளிகள் மட்டுமே அரசின் முழு அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட மதுரை மாவட்டத்தில் 70 சதவீதம் பள்ளிகள் அரசின் முறையான அங்கீகாரம் இன்றி செயல்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தப் பள்ளிகள் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவிடம் கேட்டபோது “மழலையர் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக வந்த புகாரை அடுத்து அனைத்து மழலையர் பள்ளிகள், துவக்கப் பள்ளிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 48 பள்ளிகள் அங்கீகாரம் சான்றிதழ் முறையாக இல்லாமல் செயல்படுவது தெரியவந்துள்ளது. இரண்டு பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பித்து உள்ளன. அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளுக்கு அந்தந்த வட்டார மாவட்ட கல்வி அலுவலர் மூலம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கோரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.