சென்னைக் குடிநீர் பிரச்னையை தீர்க்க வருகிறது வீராணம் ஏரி!
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து நள்ளிரவு முதல் சென்னை குடிநீர் தேவைக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை மழை கொட்டி தீர்த்தது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவான 47.5 அடியில் தற்போது 45 அடி அளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக, சென்னைக் குடிநீர் தேவைக்கு நள்ளிரவு முதல் வினாடிக்கு 60 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் சென்னை உட்பட பல நகரங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவியது. அதே போல் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கிய சோழவரம், பூண்டி செம்பரம்பாக்கம் ஏரிகளில் முற்றிலுமாக நீர்மட்டம் குறைந்தது. தற்போது பெய்த கனமழையால் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக் குடிநீர் பயன்பாட்டுக்காக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.