“ஆளுநர் தலையீட்டால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன்” - சென்னைப் பல்கலை. மாணவர் பரபரப்பு புகார்

“ஆளுநர் தலையீட்டால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன்” - சென்னைப் பல்கலை. மாணவர் பரபரப்பு புகார்
“ஆளுநர் தலையீட்டால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன்” - சென்னைப் பல்கலை. மாணவர் பரபரப்பு புகார்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறை மாணவர் ஒருவர், ஒரு மாதம் வகுப்புகளில் கலந்துக்கொண்ட பிறகு நீக்கப்பட்டுள்ள சம்பவத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கிருபா மோகன் என்ற மாணவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறை முதுநிலை பட்டப்படிப்பை முடித்தார். இதையடுத்து அதே பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு M.A (BUDDHISM) படிக்க கடந்த ஜூலை 31 ஆம் தேதி அட்மிஷன் போட்டுள்ளார். இந்நிலையில், ஒரு மாதம் வகுப்புகளில் கலந்துக்கொண்ட பிறகு அம்மாணவரை நீக்கம் செய்து துறைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தில் தீவிரமாக இயங்கியதாலேயே தான் நீக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாணவர் கூறுகையில், “நான் அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தில் உறுப்பினராக உள்ளேன். முன்னாள் ராஜ்ய சபா எம்பி தருண் விஜய், பாஜக தலைவர் எல். கணேசன் ஆகியோர் பல்கலை வந்தபோது பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம் மேலும் மாட்டிறைச்சி தடைக்கும் புதிய கல்வி கொள்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்களை நடத்தியுள்ளோம். 

இந்த சமயத்தில் கடந்த 21ம் தேதி தத்துவவியல் துறைத்தலைவர் பேராசிரியர் வெங்கடாஜலபதி என்னை அழைத்து, “ஆளுநர் மாளிகையில் இருந்து தொடர்ந்து பிரஷ்ஷர் வருவதால் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி, உங்களது அட்மிஷனை ரத்து செய்ய சொல்லி வற்புறுத்துகிறார். மாணவரிடம் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவரது சான்றிதழ்களும் சரியாக உள்ளது. எதைச் சொல்லி அவரது அட்மிஷனை ரத்து செய்வேன் என்று நான் துணைவேந்தரிடம் கூறினேன்” என்றார்.

இதைக் கேட்டதும் நான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். “எனது கல்வி சான்றிதழ்களில், கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலோ எதாவது பிரச்சனை இருக்கிறதா, எதற்கு என்னுடைய அட்மிஷனை ரத்து செய்யச் சொல்கிறார்கள்” என்று கேட்டேன்.

அதற்கு துறைத்தலைவர் பேரா.வெங்கடாஜலபதி, “நீங்கள் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் என்கிற மாணவர் அமைப்பில் ஏற்கெனவே செயல்பட்டு இருக்கிறீர்களாமே. அதனால்தான், உங்களை நீக்கச் சொல்கிறார்கள். எதையாவது சொல்லி உங்களது அட்மிஷனை ரத்து செய்யச் சொல்கிறார்கள். தினந்தோறும் துணைவேந்தரிடம் இருந்தும் ஆளுநர் மாளிகையில் இருந்தும் எனக்கு பிரஷ்ஷர் கொடுக்கிறார்கள். எனக்கும் ஆளுநர் மாளிகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தனிப்பட்ட விரோதமும் இல்லை. ஏன் இவ்வாறு நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை” என்றார். அதன்பிறகு ஒருவார காலம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.

மீண்டும் கடந்த 29ம் தேதி என்னை அழைத்த பேரா.வெங்கடாஜலபதி, “தொடர்ச்சியாக ஆளுநர் மாளிகை மற்றும் துணைவேந்தரிடமிருந்து உங்களது அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி பிரஷர் கொடுக்கின்றனர். எனது 20 ஆண்டுகால பணி அனுபவத்தில் இதுபோன்ற அழுத்தத்தை எதிர்கொண்டதில்லை. எனவே, உங்களது அட்மிஷனை ரத்து செய்துள்ளேன். அதற்கான கடிதத்தையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.

வகுப்புகள் தொடங்கி ஒருமாத காலத்திற்கு பிறகு இவ்வாறு செய்வது நியாயமா..? என்று கேட்டேன். அதற்கு “நீங்கள் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்கவில்லை, இதை முன்னிட்டு உங்கள் அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி துணைவேந்தர் கூறினார்” என்று புதிதாக ஒரு காரணத்தைக் கூறினார் பேரா.வெங்கடாஜலபதி. ஆனால், எனது அட்மிஷனின்போது “ஏற்கெனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளதால், எலிஜிபிலிட்டி சான்றிதழ் தேவையில்லை, முதுகலை புரவீஷ்னல் சான்றிதழே போதுமானது என்று நீங்கள்தானே கூறினீர்கள்” என்றேன். அதற்கு அவர், “ஆளுநர் தரப்பில் இருந்து பிரஷர், என்னால் ஒன்றும் செய்யமுடியாது” என்று கூறிவிட்டார். எனது அட்மிஷனையும் ரத்து செய்துள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக விதிகளின்படி, வேறு பல்கலைக்கழகத்தில் இருந்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வந்தால்தான் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டும். நான் ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளதால் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அவ்வாறு எலிஜிபிலிட்டி சான்றிதழ் பெறவேண்டும் என்றாலும், அந்தந்த துறைகள் மூலமாகத்தான் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து சான்றிதழ் பெறமுடியும். தனிப்பட்ட ரீதியாக எலிஜிபிலிட்டி சான்றிதழ் பெற முடியாது.

மேலும், எனக்குப் பிறகு தத்துவவியல் துறையில் அட்மிஷனான இரண்டு மாணவர்கள் தற்போதுவரை எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்காத நிலையில், என்னுடைய அட்மிஷன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் இன்னும் பல மாணவர்கள் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்காமல் உள்ளனர். பிரச்சனை எலிஜிலிபிலிட்டி சான்றிதழ் பற்றியது அல்ல. எந்தக் காரணத்தையாவது சொல்லி எனது அட்மிஷனை நீக்க வேண்டும் என்பதுதான் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நோக்கமாக உள்ளது. உரிய சான்றிதழ் கொடுத்து, கட்டணமும் செலுத்தி ஒருமாத காலம் வகுப்புகளுக்கும் சென்ற பிறகு சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் எனது அட்மிஷனை ரத்து செய்து பழிவாங்கியுள்ளது.

கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து முதல்தலைமுறையாக படிக்க வந்தவர்களில் நானும் ஒருவன். முறையான எவ்வித காரணங்களும் இல்லாமல், அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தில் இணைந்து செயல்பட்ட காரணத்திற்காக, அம்பேத்கர் பெரியாரின் கருத்துகளை பேசியதற்காக, சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் எனது அட்மிஷனை ரத்து செய்துள்ளது. இது எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் கடும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.” எனத் தெரிவித்தார். 

ஆனால், இது குறித்து பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டபோது, அம்மாணவருக்கு தற்காலிக சேர்க்கைக் கடிதம் தான் வழங்கப்பட்டிருந்ததாகவும், தகுதிச் சான்றிதழ் சமர்ப்பிக்காததன் காரணமாக அவரது சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com