“அரசியல்வாதிகள் பேசுவதை வேடிக்கை பார்க்க முடியாது” - பொன்முடி வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை!
சைவம் - வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளை பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது, ஆரம்பகட்ட விசாரணையில், புகார் குறித்த முகாந்திரம் இல்லை என தெரியவந்தால், பொன்முடிக்கு எதிரான நூற்றுக்கும் அதிகமான புகார்களும் முடித்து வைக்கப்பட்டதாக கூறினார்.
புகார்தாரர்களிடம் பெற்ற வாக்குமூலங்களின் அடிப்படையில் புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாகவும் விளக்கமளித்தார். அதற்கு, பொன்முடிக்கு எதிரான புகார்களை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவு குறித்து புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதுபோல பேசும் நபர்களின் வாயை கட்டுப்படுத்த நீதிமன்றம் விரும்புவதாக குறிப்பிட்ட நீதிபதி, அரசியல்வாதிகள் அனைவரும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே எல்லை என்ற எண்ணத்தில் செயல்படுவதாக சுட்டிக்காட்டினார். இதுபோன்ற பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் நீதிபதி காட்டமாகக் குறிப்பிட்டார். மேலும், விசாரணையை ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு தள்ளிவைத்தார்.