”மாணவர்களின் தேவைக்குதான் பணியே தவிர ஆசிரியர்களின் வசதிக்கு அல்ல”-இடமாறுதல் வழக்கில் நீதிபதி கருத்து

மாணவர்களுக்கு கல்வி, திறமைகளை போதிப்பது தான் ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, தனக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Madras High Court
Madras High CourtTwitter

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றுவதை கண்டறிந்த அரசு, உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றிய துரைராஜ், புவியியல் ஆசிரியர் சிங்காரவேலு, அறிவியல் ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, இடமாற்றம் தொடர்பாக அரசு பல்வேறு காலகட்டங்களில் பிறப்பித்த அரசாணைகளுக்கு முரணாக இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்து, திருத்துறைப்பூண்டி பள்ளியிலேயே பணியில் தொடர அனுமதிக்கும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

Court order
Court orderFreepik

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, ஆசிரியர்களின் சேவை வேறு பள்ளிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு தாமாக அப்பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்று செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தேவைப்படும் மாணவர்களுக்கு கல்வியும், திறமையும் போதிக்க வேண்டியது தான் ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, தனக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல எனக் கூறிய நீதிபதி, தற்போது இடமாறுதலுக்கான கலந்தாய்வுக்கு தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், கலந்தாய்வில் ஆட்சேபங்களை தெரிவிக்கலாம் எனக் கூறி, மனுதாரர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது என மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com