"வடகலை, தென்கலை ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்களே; மோதல் வேண்டாம்” - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை
காஞ்சிபுரத்தில் உள்ள 18 திவ்யதேசங்களில் ஒன்றான சின்னகாஞ்சி விளக்கொளி பெருமாள் எனும் தீபப்பிரகாசர் கோவில் விழாக்களின் போது, கோவிலுக்கு வெளியில் தென்கலை மந்திரம் பாடவும், தென்கலை வாழி திருநாமம் பாடவும் அனுமதி மறுத்த கோவில் செயல் அலுவலர் உத்தரவை எதிர்த்து, தென்கலை பிரிவைச் சேர்ந்த ஸ்ரீரங்காச்சாரி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, கோவிலில் தென்கலை மந்திரம் பாட அனுமதியளித்து 1915 ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, 1918 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உயர் நீதிமன்றத்தை பயன்படுத்த முடியாது. தீர்ப்பை அமல்படுத்தக் கோரி சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த கோவில் விழாக்களின் போது வடகலை - தென்கலை பிரிவினர் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்ததால், விழாக்கள் அமைதியாக நடக்க, கோவில் செயல் அலுவலர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக, நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பின் இரு இதழ்கள். இரு பிரிவுகளும் பெருமாளுக்கு சொந்தமானவை. இரு பிரிவுகளின் குருமார்களும் பெருமாளின் பாத கமலத்தில் இளைப்பாறும் நிலையில், அவர்களின் சீடர்கள் குருக்களின் பெயரால் மோதல்களை தவிர்த்து, ஒன்று சேர்ந்து குருக்களின் பாதைக்கு கவுரவம் அளித்து நம்பிக்கை பாதையில் நடைபோட வேண்டும் என இரு பிரிவினருக்கும் நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.