மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கு: ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என குற்றம்சாட்டி, தமிழ்நாடு பாஜக செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து, கடந்த 2019ல் வேலூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியதாக, தமிழக பா.ஜ.க-வின் அப்போதைய தலைவர் எல்.முருகன் மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. மாநிலங்களை உறுப்பினராக எல்.முருகன் நியமிக்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுத்து, எல்.முருகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.