தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்ய உத்தரவு
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்ய உத்தரவுweb

தாம்பரம் கமிஷ்னர் ஆஃபிஸ்-க்கு சிக்கல்..? காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! நடந்தது என்ன?

தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை இரண்டு ஆண்டுகளில் காலி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. காரணம் என்ன பார்க்கலாம்...
Published on

தற்போது உள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் தனியார் கட்டடம் ஒன்றில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தை காலி செய்து ஒப்படைக்கக் கோரி உரிமையாளர்களான கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்திரி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

காலிசெய்ய நீதிமன்றம் உத்தரவு..

அந்த மனுவில், மாதம் 10 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் வாடகை நிர்ணயித்து, 2022ம் ஆண்டு ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ஒப்பந்தப்படி வாடகை வழங்காமல், பொதுப்பணித் துறை வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், மாதம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 438 ரூபாயை வாடகையாக நிர்ணயித்து, 2022 ஜனவரி முதல் நவம்பர் வரைக்கும் 82 லட்சத்து 16 ஆயிரத்து 824 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்துக்கு மாறாக வாடகை நிர்ணயித்ததால் மாதத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்ததாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 11 மாத குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்த பின்னரும் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் கட்டடத்தை பயன்படுத்தி வருவது சட்டவிரோதம் என்பதால் அதனை காலி செய்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம்
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கட்டடத்துக்கான வாடகையை 6 லட்சம் ரூபாயில் இருந்து 13 லட்சம் ரூபாயாக அதிகரித்து உத்தரவிட்டார். இந்த கூடுதல் தொகையை அதாவது 2.18 கோடி ரூபாயை வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டார். இரண்டு ஆண்டுகளில் கட்டடத்தில் இருந்து காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com