பணிக்குத் திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை: நீதிமன்றம் எச்சரிக்கை
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை தொடங்கிய வேலைநிறுத்தம் இன்றும் தொடர்கிறது. போக்குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர் வாராகி என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகல் நடைபெற்றது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்பவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.