மெரினாவில் எம்.ஜி.ஆர் வளைவு திறக்க உயர்நீதிமன்றம் தடை

மெரினாவில் எம்.ஜி.ஆர் வளைவு திறக்க உயர்நீதிமன்றம் தடை
மெரினாவில் எம்.ஜி.ஆர் வளைவு திறக்க உயர்நீதிமன்றம் தடை

சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். 

இதனையடுத்து, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. 

இந்த நினைவு வளைவு அமைக்க தடை கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ் குமார் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஏற்கனவே காமராஜர் சாலையில் வைக்கப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன் சிலை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளதாகவும், சாலை மேம்பாட்டை தவிர்த்து எந்தக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 

மேலும், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தில், சாலைகளின் குறுக்கே, சாலையோரங்களில் எந்த நிரந்தர கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், அந்தச் சட்டத்தை மீறி சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். 

இந்நிலையில், இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்யநாராயணன், ஷேசசாயி முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எம்.ஜி.ஆர் வளைவை திறக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும் நீதிபதிகள் கூறுகையில், “வாழ்வாதாரம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு அரசு மக்களின் வரிப்பணத்தை செலவிடலாம். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. 1977-2007 வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு ரூ850 கோடி கொடுக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை என்பதால் ஆக்கிரப்பாகவே கருத வேண்டும். கட்டுப்பானப் பணிகளை முடித்துக் கொள்ளலாம், ஆனால் திறக்கக்கூடாது” என தெரிவித்தனர். 

பாதி கட்டப்பட்டுள்ள நிலையில், வழக்கு முடியும் வரை எம்.ஜி.ஆர் வளைவை திறக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com