எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்pt web

அதிமுக இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு!

இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்திற்கு பதிலளித்த உயர்நீதிமன்றம், “அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு முடிவெடுக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது
Published on

செய்தியாளர்: V. M. சுப்பையா

இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்திற்கு பதிலளித்த போது, “நிலுவை வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுக-வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு முடிவெடுக்க வேண்டும்” என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிகோப்புப்படம்

அதில் உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், “சூர்ய மூர்த்தியின் மனு தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பதில் கிடைக்கப்பெற்றது. அது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்” என தெரிவித்தார்.

அப்போது ஓ. பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “இந்த விவகாரத்தில் எங்கள் தரப்புக்கு நோட்டீஸ் அளிக்கப்படவில்லை. எங்களது தரப்பையும் கேட்ட பின்னரே முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து, சூர்ய மூர்த்தியின் மனு குறித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இபிஎஸ் ,ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com