6 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யக் கூடாது - உயர்நீதிமன்றம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலுக்கு ஒரு வாரத்துக்கு பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 7 பேரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது, தங்கள் தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது. அப்படி செய்தால், பிரேத பரிசோதனை செய்தால் தடயங்கள் அழிக்கப்படும் என்று வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதிட்டார். வழக்கறிஞர் சங்கரசுப்புவின் எதிர்ப்பை தொடர்ந்து உத்தரவை உயர்நீதிமன்றம் மாற்றியது. எஞ்சியுள்ள 6 பேரின் உடலுக்கு ஒரு வாரத்துக்கு பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பிரேத பரிசோதனை முடிந்த 7 பேரின் உடலுக்கு மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். மறுபிரேத பரிசோதனைக்கு பின் உடலை கேட்டால் உறவினர்களிடம் ஒப்படைக்கலாம். 3 மருத்துவர்கள் அடங்கிய குழு மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.
2 தமிழக அரசு மருத்துவர்களுடன் கேரளா அல்லது எய்ம்ஸ் அல்லது ஜிப்மர் மருத்துவர் பரிசோதனை செய்யலாம். குண்டு பாய்ந்த, வெளியேறிய பகுதிகளை போட்டோ எடுக்க வேண்டும். உடலை முழுமையாக அனைத்து கோணங்களிலும் எக்ஸ்ரே எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனை வளாகம், பிணவறையில் உடல் ஒப்படைக்கப்பட வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.