மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க ஆதார் கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம்

மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க ஆதார் கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம்

மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க ஆதார் கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம்
Published on

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஆதார் அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி உட்பட 7 பேர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில், “இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் பிற மாநில மாணவர்கள் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால், பிறமாநில மாணவர்களுக்கு தமிழக மாணவர்களின் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலை ரத்து செய்துவிட்டு புதிய பட்டியலை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டு இருந்தது. 

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்த போது, தமிழக மருத்துவ கலந்தாய்வில் கலந்துக் கொண்ட பிற மாணவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், வழக்கின் விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் சார்பில் உதவி கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜரானார். நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் எந்தெந்த மாணவர்கள் கலந்து கொண்டார்கள் என்பதை ஆய்வு செய்ய சிரமமாக உள்ளது. அதனால், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் பட்டியலை விரைவில் தாக்கல் செய்கிறோம் என்று கார்த்திகேயன் கூறினார். 

இதனையடுத்து, இந்த ஆண்டு நடைபெறும் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் நிச்சயம் ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். அதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் அரசும் முறையாக விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com