“பயிற்சி மருத்துவர் செலுத்திய ஊசியால் பிரசவம் ஆன எனது மகள் மரணம்” - தாய் அதிர்ச்சி புகார்

“பயிற்சி மருத்துவர் செலுத்திய ஊசியால் பிரசவம் ஆன எனது மகள் மரணம்” - தாய் அதிர்ச்சி புகார்
“பயிற்சி மருத்துவர் செலுத்திய ஊசியால் பிரசவம் ஆன எனது மகள் மரணம்” - தாய் அதிர்ச்சி புகார்

பயிற்சி மருத்துவர் செலுத்திய ஊசியின் காரணமாகவே பிரசவம் நடந்த தனது மகள் உயிரிழந்ததாகவும், உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக்கோரி தாய் ஒருவர் தொடர்ந்த வழக்கில், அரசுத்தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க மதுரைக்கிளை உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

தேனி கண்டமனூரைச் சேர்ந்த பூங்கொடி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது மகள் கனிமொழிக்கு கடந்த 2012-ல் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகள் மீண்டும் கருவுற்ற நிலையில் தேனி, ராஜதானி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாக பரிசோதனைகளை செய்து வந்தார். கடந்த ஜூன் 8-ம் தேதி மகளை பிரசவத்திற்காக ராஜதானி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்த நிலையில், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சை மூலமாக ஆண் குழந்தை பிறந்த நிலையில், அன்றே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 15-ம் தேதி தையல் பிரிக்கப்பட்டு, தாயும் சேயும் நலமாக இருந்தனர். ஜூன் 16-ம் தேதி பயிற்சி மருத்துவர் எவ்வித பரிசோதனையும் செய்யாமல் எனது மகளுக்கு ஊசி ஒன்றை போட்டார். அதைத் தொடர்ந்து எனது மகளுக்கு கடுமையான வலி ஏற்பட்ட நிலையில், என்னிடம் கையெழுத்து மட்டும் பெற்றுக் கொண்டு எனது மகளை செப்டிக் சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த நோயாளிகளை வெளியே அனுப்பிவிட்டு எனது மகளுக்கு சிகிச்சைகளை அளித்தனர். அப்போது எனது மகளுக்கு ஊசி செலுத்திய பயிற்சி மருத்துவரை மூத்த மருத்துவர் கண்டித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், 21-ம் தேதி எனது மகள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனது மகளின் மரணத்திற்கான காரணத்தை மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிடாததோடு, எந்தப் பிரச்சனையும் செய்யாமல் மகளின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு மிரட்டினர். காவல்துறையினரும் உடலை பெற்றுக் கொள்ளுமாறு எங்களை வற்புறுத்தினர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்யுமாறும், எனது மகளின் உடலை உடற்கூராய்வு செய்யுமாறும், பலமுறை கோரிக்கை விடுத்தும் அதை ஏற்கவில்லை. காவல்துறையினரும் மிரட்டியதால் எனது மகளின் உடலை பெற்றுக்கொண்டு சத்திரப்பட்டி கிராம மயானத்தில் உடலை அடக்கம் செய்தோம்.

எனது மகளின் மருத்துவ அறிக்கைகளை மருத்துவர்கள் வழங்கவில்லை. பயிற்சி மருத்துவர் தவறான மருந்துகளை செலுத்தியதே எனது மகளின் இறப்பிற்கு காரணம். இதுதொடர்பான நடவடிக்கைக் கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே சித்தாரப்பட்டி மயானத்தில் புதைக்கப்பட்ட தனது மகளின் உடலை 2 மூத்த தடய அறிவியல் துறையின் பேராசிரியர்கள் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கு தொடர்பாக தகவல் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com