தாமாக முன்வந்து ஹெச்.ராஜா மீது வழக்கு ஏன்? - நீதிபதிகள் விளக்கம்
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் இந்த ஊர்வலம் சென்றது. அப்போது குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த ஹெச்.ராஜா காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தடையையும் மீறி ஊர்வலம் சென்றது. இதனிடையே வாக்குவாதத்தில் நீதிமன்றம் மற்றும் காவல்துறையினர் குறித்து மோசமான கருத்துக்களை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனிடையே, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் முறையிட்டனர். ஆனால், நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு தாமாக முன் வந்து விசாரிக்க மறுத்திருந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்காக பதிவு செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார் அமர்வு ஹெச்.ராஜா தொடர்பான வழக்கை தாமாக விசாரிக்க முன் வந்துள்ளது. தாமாக முன் வந்து ஹெச்.ராஜா தொடர்பான வழக்கை விசாரிப்பது குறித்து நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். அப்போது, “பத்திரிகை செய்தி அடிப்படையில் வழக்குகளை தானாக முன்வந்து எடுக்கக்கூடாது என்றும்; சக நீதிபதிகள் அவமானப்படுத்தப்பட்டாலும் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளே எடுக்கட்டும் எனவும் சில நீதிபதிகள் மறுத்துவிடுவார்கள் அல்லது காத்திருப்பார்கள்.
ஹெச்.ராஜாவின் வீடியோ உலகம் முழுக்க பரவியது என்றாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்தது என்பதால் மதுரையில் கிளையில் பார்த்துக் கொள்ளட்டும் என சிலர் நினைக்கக்கூடும். காவல்துறை ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளதால், அந்த விசாரணை நல்ல முறையில் முடியும் என காத்திருப்பவர்களும் இருப்பார்கள். ஆனால் அரசும், காவல்துறையும் போகிற போக்கில் மறப்போம், மன்னிப்போம் என விசயத்தை மறந்து விடுவார்கள்.
நீதி பரிபாலனம் செய்வதில் நீதிபதிகள்தான் அச்சாணி என்பதை உணர்ந்து, நீதித்துறையின் கண்ணியத்தை காப்பது நீதிபதிகளின் தலையாயக் கடமை. எனவே உச்ச, உயர், கீழமை நீதிமன்ற மாண்பை காக்க வேண்டியதும் கடமை. ஜனநாயகத்தின் தூணான நீதித்துறையை களங்கப்படுத்த எடுக்கும் ஒரு முயற்சியை அனுமதிப்பது என்பது பாஸிசத்தையும், நக்ஸலிசத்தையும் வளர்ப்பதாகவே அமையும். அதனால் திருமயம் பகுதியில் ஹெச்.ராஜா பேசிய நீதிமன்றம் குறித்த பேச்சு தொடர்பாக தானாக முன்வந்து வழக்கை எடுக்கிறோம்” என்று கூறினர். மேலும், அக்டோபர் 22ஆம் தேதிக்கு முன்பு ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.