‘பட்டணப்பிரவேசத்துக்கு பாதுகாப்பு வேண்டுமெனில் அரசிடம் விண்ணப்பிக்கவும்’ - நீதிமன்றம்

‘பட்டணப்பிரவேசத்துக்கு பாதுகாப்பு வேண்டுமெனில் அரசிடம் விண்ணப்பிக்கவும்’ - நீதிமன்றம்
‘பட்டணப்பிரவேசத்துக்கு பாதுகாப்பு வேண்டுமெனில் அரசிடம் விண்ணப்பிக்கவும்’ - நீதிமன்றம்

பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி விண்ணப்பிக்கும்படி தருமபுரம் ஆதீனத்துக்கு அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ஆதீனகர்த்தர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து முன்வைத்த கோரிக்கையை ஏற்று பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி மே 22ஆம் தேதி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், பட்டணப் பிரவேச நிகழ்ச்சியின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ராஜா சிவபிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், `தமிழக ஆளுநர் ரவி, தருமபுரம் ஆதீனத்துக்கு சென்று வந்த பின், சில அமைப்புகளின் நெருக்கடி காரணமாக பட்டபிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த அமைப்புகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது’ என அச்சம் தெரிவித்துள்ளார். மேலும் `தமிழகத்தில் உள்ள அனைத்து மடங்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஹிந்துக்களின் மரபு, பண்டிகை, நடைமுறைகளில் தலையிட தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும்’ எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பாதுகாப்பு கோரி இதுவரை ஆதீனத்தின் தரப்பில் விண்ணப்பிக்கவில்லை எனவும், பாதுகாப்பு கோரி விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் தருமபுரம் ஆதினத்தை வழக்கில் எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்த்த நீதிபதிகள், பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு விண்ணப்பிக்கும்படி தருமபுரம் ஆதீனத்துக்கு உத்தரவிட்டனர். ஆதீனத்தின் சார்பில் அளிக்கப்படும் விண்ணப்பத்தை பரிசீலித்து பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com