மருத்துவ பட்டதாரிகளின் சான்றிதழ்களை திரும்ப வழங்குக- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ பட்டதாரிகளின் சான்றிதழ்களை திரும்ப வழங்குக- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மருத்துவ பட்டதாரிகளின் சான்றிதழ்களை திரும்ப வழங்குக- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மேற்படிப்பை முடித்த இரண்டு ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படாதவர்களுக்கு, அவர்களின் உண்மை சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புகளில் சேருபவர்கள் இரு ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள், ஒப்பந்தம் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். இதன்படி ஒப்பந்தக் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படாததால், மாணவர் சேர்க்கையின்போது சமர்ப்பித்த உண்மைச் சான்றுகளை திருப்பித் தரக்கோரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 2020ஆம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பை முடித்த அருண்குமார், சுபோத் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

படிப்பை முடித்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், தங்களது உண்மை சான்றை திருப்பி தரக்கோரி விண்ணப்பித்தபோது, ஒப்பந்தத்தை காரணம் காட்டி உண்மை சான்றிதழ்களை வழங்கவில்லை என மனுக்களில் குற்றம்சட்டியுள்ளனர்.

இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், படிப்பிற்கு பிறகு மருத்துவமனையில் பணி வழங்கினாலும், வழங்காவிட்டாலும், 2 ஆண்டுகள் முடிந்த பிறகு உண்மை சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் திருப்பி கொடுக்கவேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளதால், சான்றிதழ்களை திருப்பித் தர உத்தரவிட வேண்டுமென வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில், படிப்பை முடித்தவுடன் மருத்துவமனையில் பணி ஒதுக்கவில்லை என்ற காரணத்திற்காக ஒப்பந்தத்தை மீற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார், படிப்பை முடித்ததிலிருந்து 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் அந்த கால அவகாசம் முடிந்த பின், சான்றிதழ்களை பெற மனுதாரர்களுக்கு உரிமையுண்டு எனத் தெரிவித்துள்ளார். அதன்படி, அரசு தனது முடிவை மீண்டும் பரிசீலித்து, படிப்பை முடித்து 2 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால், அந்த மாணவர்களின் உண்மை சான்றிதழ்களை 2 வாரங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இரு ஆண்டு காலம் முடிவடையாவிட்டால், மீதமுள்ள காலத்திற்கு அவர்களின் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒருவேளை அரசு மருத்துவமனையில் பணியாற்ற கடிதம் அனுப்பியும், பணியில் சேராதவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

இதையும் படிக்க: மதத்ததால் பிரிவுப்படுத்தும் ஆர்எஸ்எஸ்-க்கு தமிழகத்தில் அனுமதி இல்லை – மனோ தங்கராஜ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com