பாலியல் புகாரில் சிக்கிய அமமுக வேட்பாளர் கதிர்காமுவுக்கு முன்ஜாமீன்
பாலியல் புகாரில் சிக்கியுள்ள பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமுவுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் கதிர்காமு மீது தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டது. தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும், காழ்ப்புணர்வுடனும் வழக்குப் பதியப்பட்டு உள்ளதாகவும், பெரியகுளம் வேட்பாளராக உள்ள தமக்கு முன்ஜாமீன் வழங்குமாறும் கோரி கதிர்காமு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, அமமுகவின் வேட்பாளர் கதிர்காமுவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதேவேளையில் தேர்தல் முடிந்தபின்பு இவ்வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டால், மனுதாரர் கதிர்காமு அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறி வழக்கை முடித்துவைத்தார்.